“தவெக தலைவர் விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது” – திருமாவளவன் கருத்து

“தவெக தலைவர் விஜய் செய்யும் ‘வெறுப்பு அரசியல்’ மக்களிடம் எடுபடாது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பொதுக் கூட்டம், மாநாடு என வழக்கமான அரசியலைத்தான் தவெக தலைவர் விஜய் செய்கிறார். கூட்டணியில் இருந்தாலும் காவல் துறையினர் எங்களுக்கு விதிக்கும் வழக்கமான நிபந்தனைகள்தான் அவருக்கும் விதிக்கப்படுகின்றன. வேறு எந்த வகையிலும் அரசோ, காவல் துறையோ அவருக்கு நெருக்கடி தருவதாக எனக்குத் தெரியவில்லை.

திமுக எதிர்ப்பு என்பதைவிட, திமுக வெறுப்பை விஜய் அரசியலாக பேசிக் கொண்டிருக்கிறார். எதிர்ப்பு என்பது வேறு; வெறுப்பு என்பது வேறு. தான் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த அவர் இதுவரை பேசியதாகத் தெரியவில்லை. வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடாது. செயல் திட்டங்கள் எதிர்கால களப்பணிகள் ஆகியவை குறித்து விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பே மக்களிடத்தில் இருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, விஜய் வாய் திறந்து எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் மீது பரிதாபம் காட்டும் முயற்சி வெறும் அரசியலுக்கானது என்றுதான் கருத வேண்டியுள்ளது” என்று திருமாவளவன் கூறினார்.

Facebook Comments Box