பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார்

தமிழ்நாடு அரசு எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார். அவருக்கு வயது 56.

தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கரோனா காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு’ – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட இரங்கல் செய்தியில், “முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராணி வெங்கடேசனின் மகள், தமிழக அரசின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

பீலா வெங்கடேசன் தமிழ்நாடு அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியபோது, ஒவ்வொரு துறையிலும் தன் நேர்மை, கடமை உணர்வு மற்றும் பொதுமக்கள் நலனுக்கான அக்கறை ஆகியவற்றால் சிறப்பாகப் புகழ்பெற்றவர். குறிப்பாக கொரோனா நோய் பரவிய காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக இருந்தபோது, மக்களின் உயிரைக் காப்பதற்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சியும், உறுதியான நடவடிக்கைகளும் என்றும் மறக்க முடியாதவை.

அந்த நேரத்தில் மருத்துவ வசதிகள், சிகிச்சை ஏற்பாடுகள், தடுப்பூசி பணிகள் என அனைத்திலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு தமிழக மக்களின் மனதில் நிலைத்திருக்கும். எந்த பொறுப்பை கொடுத்தாலும் தனி ஆளுமையோடு செயல்படக்கூடியவர். இவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பீலா வெங்கடேசனின் மறைவினால் வாடும் அவரது தாயார் ராணி வெங்கடேசனுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box