வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி டிசம்பர் முதல் வாரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் நடத்தப்படும். இதில் 30 வயதுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்பார்கள்.

30 வயதுக்கு மேலே உள்ளவர்கள் போராட்டம் நடத்த உதவி செய்வார்கள். போராட்டத்தை வடிவமைக்க கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள்தான் பாமக என்று ஒரு கும்பல் கூறிக் கொண்டிருக்கிறது. அவர்களது வேஷம் கலைக்கப்படும். போலி முகவரி கொடுத்து தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை பெற்றுள்ளவர்கள் போலி ஆசாமிகள். ‘பிஹாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னத்தை பெற்றுள்ளது’ குறித்து கேட்கிறீர்கள்.

அவர்கள் தென் கொரியா, ஜப்பான், மொரீஷியஸ் தீவில் கூட மாம்பழச் சின்னத்தில் போட்டியிடலாம். இவ்வாறு ராமதாஸ் கூறினார். வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு கோரி டிச.17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி அறிவித்திருந்த நிலையில், இதற்குப் போட்டியாக டிசம்பர் முதல் வாரத்தில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்காக ராமதாஸும் போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box