ஜி.கே.மணி பதவி நீக்கம்: பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக எஸ்.பி. வெங்கடேஸ்வரன் நியமனம்
பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த ஜி.கே.மணியை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாமக செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.பாலு அறிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாமக சட்டப்பேரவை குழு துணைத் தலைவராக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை பாமக அரசியல் தலைமைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கியுள்ளோம்” என்றார்.
மேலும், “சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டதால், கடந்த ஜூலை 3 அன்று அவர் கொறடா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கான கடிதத்தை கொடுத்திருந்தாலும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்தும் மீண்டும் கடிதம் வழங்கியுள்ளோம்.
பாமக பொதுக்குழுவில் தலைவர் அன்புமணி உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2026 வரை நீட்டிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் அதனை அங்கீகரித்துள்ளது. மாம்பழம் சின்னம் மற்றும் வேட்பாளர்களுக்கான சின்ன ஒதுக்கீடு அதிகாரம் அன்புமணிக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் அன்புமணி தலைமையில் ஒருமித்து செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.
ஜி.கே.மணி குறித்து அவர் கூறுகையில், “25 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர், அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டவர். ஆனால் சமீபத்தில் கட்சிக்கு எதிரான கருத்துகளை கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே அவரை சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து மட்டுமே விடுவித்துள்ளோம்; கட்சியிலிருந்து நீக்கவில்லை” எனத் தெரிவித்தார்.