வள்ளி கும்மி கலைஞர் பாலுவுக்கு கலைமாமணி விருது வழங்க விசிக எதிர்ப்பு

வள்ளி கும்மி கலைஞர் கே.கே.சி. பாலுவுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதற்கு தொடர்பாக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு வெளியிட்ட அறிக்கையில், “கலை, இலக்கியம், சினிமா உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. தற்போது கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில் கிராமிய பாடகர்களுக்கு வீரசங்கர், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சி, நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன், பெரிய மேளத்துக்காக முனுசாமி ஆகியோர் விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விசிகவின் வாழ்த்துகள்.

இந்த வரிசையில், வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி. பாலுவுக்கும் கலைமாமணி விருது தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. வள்ளி கும்மி வழியாக ‘வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்’ என சத்தியம் வாங்கி வருகிறார் பாலு. இது பெண்கள் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய உரிமைக்கு எதிரானது.

மேலும், பெண் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த பெரியாரின் நிலத்தில் இருந்து, இந்த பழமையான சாதி கருத்தியலை முன்னெடுத்த கே.கே.சி. பாலுவுக்கு விருது வழங்கப்படுவது சாதியத்தை ஊக்குவிக்கும். எனவே, பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் மற்றும் சாதியத்தை பரப்பும் வள்ளி கும்மியை தடை செய்ய வேண்டும்” என்று வன்னியரசு தெரிவித்தார்.

Facebook Comments Box