கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கோரி விசிக துண்டுப் பிரசுரம்
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் பணியாற்றும் வேலைவாய்ப்புகளில் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் முன்னுரிமை பெற வேண்டும் என வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்பாக்கம் பகுதியில் பல்வேறு அணு நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக ஈனுலை மையம் (பாவினி) அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் திரவ சோடியத்தை குளிர்விப்பானாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தை கட்சி புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து, அதிவேக ஈனுலை மையத்தில் பயன்படுத்தப்படும் ஆபத்தான தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு அணுசக்தி நிர்வாகத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் தொகுதி எம்பி. துரை. ரவிக்குமார், செய்யூர் எம்எல்ஏ பாபு, மற்றும் விசிக கட்சியினர் பங்கேற்றனர்.
பஜார் வீதியில் உள்ள கடைகளில் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் கிட்டு, தயாளன், சம்சுதீன், செங்கேணி, மணவாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் எம்பி. துரை. ரவிக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கல்பாக்கத்தில் 2024-ம் ஆண்டு பிரதமர் மோடி அதிவேக ஈனுலை மையத்தை தொடங்கியுள்ளார். இதில் திரவ சோடியம் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. பிரதமர் மோடி, மாற்று எரிசக்தியாக சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டாலும், தற்போதைய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் ஆபத்தான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், 2007-ம் ஆண்டு அணு திருத்த சட்ட ஒப்பந்தத்திற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது அதே சட்டத்தை பாஜக திருத்தம் செய்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடாளுமன்றத்தில் கடுமையாக கண்ணுக்கேட்டுள்ளோம். மேலும், கல்பாக்கம் அணுகழிவு குப்பை மேடாக மாற்றப்படுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக தமிழக முதல்வர் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் அணுமின் நிலையத்தால் புற்றுநோய் மற்றும் கதிர்வீச்சு பாதிப்புகளை அனுபவிக்கின்றனர். எனவே, சிறப்பு சுகாதார காப்பீட்டு திட்டம் உருவாக்கி, அதற்கான நிதியை அணுசக்தி துறையிடமிருந்து பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.