திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் உள்ளே, வெளியே கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கோயில் நிதியில் வணிக வளாகம் அமைப்பதை எதிர்த்து, ஆலய வழிபாட்டாளர் சங்கத் தலைவர் மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் அடங்கிய அமர்வில் நடந்தது. கடந்த முறை விசாரணையில், வணிக வளாகம் அமைப்பதற்குப் பதிலாக பக்தர்கள் தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் வகையில் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் காத்திருப்பு மையமாக மாற்றியுள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் கூறப்பட்டது. அதனால் அதுகுறித்த வரைபடம் மற்றும் தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன், ராஜகோபுரம் வெளியே க்யூ காம்ப்ளக்ஸ் அமைக்கும் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் நேரம் கோரினார்.

அப்போது மனுதாரர் டி.ஆர். ரமேஷ், “ராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள 16 கால் மண்டபம் அருகே க்யூ காம்ப்ளக்ஸ் அமைக்கப் போவதாக கூறுகிறார்கள். அப்படி கட்டினால் சுவாமி புறப்பாடு, பூஜைகளுக்கு இடையூறு ஏற்படும். ராஜகோபுரம் முன்பாக வெற்றிடமே இருக்காது. ஆனால் கோயிலின் நான்காம் பிரகாரம் அருகே ஏற்கனவே க்யூ காம்ப்ளக்ஸ், காத்திருப்பு மையம் கட்டி வருகின்றனர். நூறு ஆண்டுகளுக்கு மேலான தொல்லியல் சிறப்புமிக்க இடத்தில் இத்தகைய கட்டுமானங்களுக்கு முன் தொல்லியல் துறையின் அனுமதி அவசியம். ஆனால் அதுபோன்ற அனுமதி பெற்றார்களா என்பது தெரியவில்லை” எனக் கூறி, தற்போதைய கட்டுமானப் புகைப்படங்களை நீதிமன்றத்தில் காட்டினார்.

அந்த புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள், “கோயிலுக்குள் நடைபெறும் க்யூ காம்ப்ளக்ஸ் கட்டுமானம் குறித்து ஏன் முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிக்கவில்லை? அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று அறநிலையத் துறையிடம் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, அறநிலையத் துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், அண்ணாமலையார் கோயிலின் உள்ளும், வெளியும் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தனர். வழக்கு விசாரணை அக்டோபர் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய தினம், கோயில் உள்ளே மற்றும் வெளியே நடைபெறும் கட்டுமானத்தின் அவசியம், தொல்லியல் பாரம்பரியத்திற்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றுக்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், அக்டோபர் 5ஆம் தேதி கோயிலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

Facebook Comments Box