‘மத்திய அரசு மிரட்டலால் பணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என மத்திய அரசு நெருக்கடி கொடுத்து அடிபணியச் செய்ய முடியாது என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வலுவான வாதம் முன்வைக்கப்பட்டது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுகிறார்கள். அந்த இடங்களுக்கு அரசால் வழங்கப்பட வேண்டிய நிதியை முழுமையாக அளிக்காமல் குறைந்த தொகை மட்டுமே தரப்படுகிறது என்று தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, உயர்நீதிமன்றம் 2024–25 கல்வியாண்டுக்கான கட்டணத்தையும், 2025–26ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட அதிகரிக்கப்பட்ட கட்டணத்தையும் தனியார் பள்ளிகளுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், வழங்கப்பட வேண்டிய தொகையை முழுமையாக தரவில்லை என பள்ளிகள் சார்பில் அவமதிப்பு மனு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. தனியார் பள்ளிகள் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன், “உயர்நீதிமன்றம் கூறியபடி தொகை வழங்கப்படவில்லை” என்றார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 60% நிதியை மத்திய அரசு, 40% நிதியை மாநில அரசு வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு, ‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பங்குத் தொகை தரப்படும்’ என்று பிடிவாதம் பிடிக்கிறது. நாங்கள் ஒருபோதும் அதற்கு தலைவணங்கமாட்டோம்” என்றார்.

அப்போது நீதிபதி, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் நிதி கிடைக்குமே” என்றார். உடனே கூடுதல் தலைமை வழக்கறிஞர், “மத்திய அரசு மிரட்டி பணிய வைக்க முடியாது; தமிழக அரசும் அடிபணியாது. இதுகுறித்து உரிய பதில்மனு தாக்கல் செய்யப்படும்” என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கை அக். 24க்கு ஒத்திவைத்தார்.

Facebook Comments Box