“ஒரு படத்தை இயக்கியிருக்கிறீர்கள்… அதற்கு கல்விதான் காரணமா?” – தமிழரசன் பச்சமுத்துவுக்கு சீமான் கேள்வி
“நீங்கள் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் கல்விதான் காரணமா?” என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“திமுக அரசு நடத்திய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் உண்மையில் சிறந்த கல்வியாளர்கள் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? அது எனக்குப் பார்த்தால் ஆடியோ வெளியீட்டு விழா மாதிரி இருந்தது. கல்வியில் சிறந்தவர்கள் நாட்டில் இல்லையா? அவர்களைப் பேசியிருக்கலாமே.
அரசுப் பள்ளிகள் 2,500க்கு மேல் மூடப்பட்டுவிட்டன. இன்று பல பள்ளிகள் கழிவறையைவிட மோசமாக இருக்கின்றன. கல்வியை முதலாளிகள் லாபம் பார்க்கும் வணிகமாக மாற்றிவிட்டு, ‘சிறந்த கல்வி தமிழ்நாடு’ என்று சொல்வது எவ்வளவு நியாயம்? பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் தாய்மொழி எழுத மையத்திற்கே வரவில்லை. பட்டம் பெற்றவர்களுக்கே தாய்மொழியை எழுத தெரியவில்லை. இதுதான் கல்வியில் சிறக்கிறதா?
திமுக அரசு விளம்பர அரசே தவிர வேறு ஒன்றுமில்லை. சமூக நீதி என்ற பெயரில் கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதே இவர்களின் சாதனை. உண்மையான சமூக நீதி என்றால் – அனைவரும் சமமாக அமர்ந்து கல்வி கற்றால்தான் கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘இளையராஜா படித்தாரா? சச்சின் படித்தாரா? ரஹ்மான் படித்தாரா?’ என்று கேட்குபவர்களை நம்ப வேண்டாம் என்றார். ஆனால் நான் சொன்னதையே அவர் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஒரு படத்தை இயக்கியிருப்பது, உங்கள் கல்வியால்தானா? தனித்திறமையால்தானே? நான் என்ன சொன்னேன் என்பதை கேட்காமல் கைதட்டல் வாங்குவதற்காக பேசினார்.
இன்னும் சொல்லப்போனால், முதல்வரும் துணை முதல்வரின் கல்வித் தகுதி என்ன? உதயநிதி ஸ்டாலின் தான் கூறுகிறார் – ‘என்னுடன் படித்தவர் வழக்கறிஞர் ஆனார், நான் படிக்காமல் துணை முதல்வர் ஆனேன்’ என்று.”