ஸ்டாலின் வெளியிட்ட 26 புதிய நூல்கள்; ரூ.39 கோடியில் 146 நூலக கட்டிடங்கள் திறப்பு

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 26 புதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி, தமிழ்நாட்டு வரலாறு, நாட்டுடைமை நூல்கள், மூத்த வரலாற்று அறிஞர்கள் படைப்புகள், நூற்றாண்டு காணும் ஆளுமைகள், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கிய திட்டம், செவ்வியல் நூல்கள் போன்ற பிரிவுகளின் கீழ் இந்த 26 புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டபடி, 821 பொது நூலகங்களுக்கு சிறப்பு நிதியுதவி ரூ.213.46 கோடி அளவாகக் கோரப்பட்டது. இதில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 90 நூலகங்கள், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 32 நூலகங்கள், நகராட்சி நிர்வாகத் துறை மூலம் 20 நூலகங்கள் ஆகியவை ரூ.31.24 கோடியில் கட்டப்பட்டு, ரூ.2.84 கோடியில் நூல்கள், ரூ.2.05 கோடியில் தளவாடங்கள், ரூ.78 லட்சத்தில் கணினி சாதனங்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.36.92 கோடியில் நூலகங்கள் தயாராகியுள்ளன.

மேலும், கோயம்புத்தூர் – பெரியநாயக்கன்பாளையம், ஈரோடு – கோபிசெட்டிபாளையம், ஆலாம்பாளையம், அரியலூர் – ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் ரூ.2.41 கோடியில் 4 நூலகங்கள் கட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் ரூ.39.33 கோடியில் 146 நூலக கட்டிடங்களை திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் 4 தளங்களுடன் ரூ.4.01 கோடியில் கட்டப்பட உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நடந்தது.

இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் ஐ.லியோனி, மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் சரவணன், உறுப்பினர் செயலர் உஷாராணி, பொது நூலக இயக்குநர் ஜெயந்தி மற்றும் இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் பங்கேற்றனர்.

Facebook Comments Box