நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச வதிவினரை நாடு கடத்த நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 31 பேரை நாடு கடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே வாகரையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்த 31 பேரை மே 24-ஆம் தேதி கள்ளிமந்தையம் போலீசார் கைது செய்தனர். இதில் சிறுவனொருவரை மட்டும் மதுரை சிறுவர் காப்பகத்தில் வைத்தனர்; மீதமுள்ள 30 பேரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறுவன் உட்பட 2 பேருக்கு 115 நாட்கள், மற்ற 29 பேருக்கு 125 நாட்கள் சிறைத் தண்டனை மற்றும் ஒவ்வொருவருக்கும் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கு ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து, நீதிபதி கபாலீஸ்வரன், 31 பேரின் சிறைக் காலத்தையும் அபராதத்தையும் அறிவித்தார்.
இதையடுத்து, சிறுவன் திண்டுக்கல் காந்தி கிராம சிறுவர்கள் காப்பகத்தில், மற்ற 30 பேரை மதுரை சிறையிலும் அடைத்தனர். அவர்களை நாடு கடத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் பிற நாடுகளைச் சேர்ந்தோர் சட்டவிரோதமாக தங்கியிருந்தால், அவர்களுக்கும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.