‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்த வருவாய்துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்த வருவாய்துறை அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதி தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. இதனால் “வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை” என்ற அடிப்படையில் சம்பளம் மற்றும் படிகள் வழங்க இயலாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், செப்டம்பர் 25 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் விவரங்களை அரசுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இதன்படி, செப்.3 மற்றும் 4-ம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அலுவலர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்து விவரங்களை உடனடியாக வருவாய் நிர்வாக ஆணையரகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், செப்டம்பர் 25 முதல் மற்றும் தொடர்ந்து புறக்கணித்த அலுவலர்களுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை உருவாக்கி, “வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை” அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விவரங்களை உடனடியாக ஆணையரகத்திற்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.