திரைப்படம், நாடகத் துறையின் பிரபலங்கள் ஜெய்சங்கர், எஸ்.வி. வெங்கட்ராமன் பெயரில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறப்பு

சென்னையின் கிண்டியில் ரூ.23.10 கோடியில் அமைக்கப்பட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகக் கட்டிடத்தையும், நடிகர்கள் ஜெய்சங்கர் மற்றும் எஸ்.வி. வெங்கட்ராமன் பெயரில் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்ப் பலகைகளையும், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி வழியாக திறந்து வைத்தார்.

இயற்கை வளங்கள் துறையின் சார்பில் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தரை மற்றும் 4 தளங்களுடன், 40,528 சதுர அடியில் கட்டப்பட்ட அலுவலகம் ரூ.23.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் – ‘மக்கள் கலைஞர்’, ‘தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட்’ எனப் புகழப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் கல்லூரி சாலைக்கு “ஜெய்சங்கர் சாலை” என்றும், நாடக நடிகர், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் மற்றும் எஸ்.வி. சேகரின் தந்தை எஸ்.வி. வெங்கட்ராமன் வசித்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்குத் தெருவுக்கு “எஸ்.வி. வெங்கட்ராமன் தெரு” என்றும் பெயர் சூட்டப்பட்டது.

அதேநேரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் 38 பேருக்கும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் 18 பேருக்கும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கும் என மொத்தம் 62 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், சென்னை மேயர் ஆர். பிரியா, பல்வேறு துறைச் செயலர்கள், ஜெய்சங்கர் மற்றும் எஸ்.வி. சேகர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box