தமிழகத்தை ‘கடன்கார மாநிலம்’ ஆக படுகுழியில் தள்ளிய திமுக அரசு: தரவுகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் சாடல்
‘திமுகவின் தோல்வி மாடல் அரசு ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழக நிதி நிலைமையை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “தமிழ்நாட்டின் கடன் சுமையை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றிவிட்டு, இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக மாற்றி, வெற்று விளம்பரங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றி வரும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, ஆகஸ்ட் 2025-க்கான மாநில கணக்கு தணிக்கை அறிக்கையின் படி, ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் நிதிச் சுமையில் தள்ளாடி வருவதை தெளிவாகக் காண முடிகிறது.”
2021-ல் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மாநில பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன் சுமையை குறைக்கவும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு பரிந்துரைத்தது. அதனை அரசு செயல்படுத்தியதா என்பது தெரியவில்லை. மேலும், கடன் வாங்கி அரசின் வருவாயை பெருக்கும் யோசனைதான் இந்த நிபுணர் குழுவால் வழங்கப்பட்டதாக சந்தேகம் எழுகிறது.
மாநில கணக்கு தணிக்கை அறிக்கையின் (CAG) ஆகஸ்ட் 2025 புள்ளிவிவரப்படி, வருவாய் தலைப்பில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வருவாய் குறைந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய, திமுக அரசு மேலும் கடன் வாங்கி தமிழகத்தை ‘கடன்கார மாநிலம்’ என படுகுழியில் தள்ளியுள்ளது.
வாங்கிய கடனில் பெரும்பகுதி வருவாய் செலவுக்கே செலவிடப்படுகிறது என்று CAG தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை சுமார் 37,082 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், மூலதனச் செலவாக வெறும் ரூ.9,899 கோடி செலவிட்டுள்ளது; மீதமுள்ள ரூ.27 ஆயிரம் கோடி வருவாய் செலவுக்கே செலவிடப்பட்டுள்ளது.
2025-26 நிதி நிலை அறிக்கையில், வருவாய் பற்றாக்குறை இலக்கு 41,635 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 5 மாதங்களிலேயே வருவாய் பற்றாக்குறை 25,686 கோடி ரூபாயை எட்டிவிட்டது. மீதமுள்ள 7 மாதங்களில் மொத்த வருவாய் பற்றாக்குறை சுமார் 60 ஆயிரம் கோடியை தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூலதனச் செலவுக்காக 57,271 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்ட நிலையில், இதுவரை வெறும் 9,899 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 47,000 கோடி ரூபாயை மழைக்காலம், அதன்பின் தேர்தல் ஆகிய நிலையில் எப்படி செலவிடும் என்பது கேள்விக்குறியதாக உள்ளது.
ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் கழிவு கட்டணங்கள், பதிவுக் கட்டணம், தொழில் வரி, மின் கட்டணம், நில வழிகாட்டு மதிப்பீடு போன்ற அனைத்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு, 4 ஆண்டுகளில் வருவாய் பல மடங்கு உயர்ந்த நிலையில், கடன் வாங்குவதிலும் தமிழக அரசு இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது.
கடன் வாங்கி கார் பந்தயம், நினைவு மண்டபம் போன்ற ஆடம்பரச் செலவுகள், ஊராட்சி நிதியிலும் வீண் விளம்பரச் செலவுகள் செய்து தமிழகத்தை இந்த விடியா திமுக ஃபெயிலியர் மாடல் முதல்வர் ஸ்டாலின் நிதியில் மூழ்கடித்துள்ளார்.
சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் வங்கிகளில் வாங்கிய கடன் மொத்தம் சுமார் ரூ.23 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது. நெல் கொள்முதல் செய்ய தேவைப்படும் 10 ஆயிரம் கோடியை மத்திய அரசின் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (NCDC) மூலம் வாங்க முயற்சிக்கிறது.
இவ்வாறு அரசு, கடன் மட்டுமின்றி, போக்குவரத்து, மின்சார வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் 4 ஆண்டுகளில் அதிக கடன் வாங்கி தமிழகத்தை திவாலாக்கும் படியில் நிற்க வைத்தது விடியா திமுக ஃபெயிலியர் மாடல் முதல்வர் ஸ்டாலினின் சாதனை.
நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் சொல்லுவார்கள்.
நிதி மேலாண்மை தெரியாத ஸ்டாலின் ஆட்சியில், 80 சதவீதம் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மூன்றாண்டுகளுக்கு மேல் தள்ளி, தாங்கள் கொண்டு வந்தது போல் மோசடி நாடகம் நடத்தி, மக்களுக்கு எந்த நல்ல திட்டமும் வழங்கவில்லை. மக்களின் வரிப் பணத்துடன் 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வீண் செலவுகள் செய்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாவது, “செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆட்சியாளர்கள். உடனடியாக கடன் வாங்குவதை குறைத்து, தமிழக அரசு மற்றும் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் வாங்கிய கடன் செலவுகள் பற்றிய விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.”