விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு தான் பாதிப்பு: ஜவாஹிருல்லா
திமுகவுக்கு எதிரான வாக்குகளைத் தவிர, தலைவர் விஜய் பிரிப்பார் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
விழுப்புரத்தில் இன்று (செப்.27) நடைபெற்ற அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை திமுக உட்பட இந்திய கூட்டணி கட்சியினர் இரு அவைகளிலும் கடுமையாக எதிர்த்தனர். இதற்கான இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்தது. சில நல்ல அம்சங்கள் உள்ளன; ஆனால் பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழலில் வக்பு வாரியத்தின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. புதிய வக்பு வாரியத்தை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளுக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை புதிய வாரியத்தை அமைப்பதை நிறுத்தி வைப்பதாக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கு, தனது முயற்சியே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறுவது நகைச்சுவை. தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, கருவூலத்தை முற்றிலுமாக காலி செய்தது. தமிழகத்திற்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியை மத்திய பாஜக அரசு தராமல் வஞ்சிக்கிறது.
சவால்களை எதிர்கொண்டு, நிதி நிலையை சீரமைத்து, நிதியை பெருக்குவதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். கல்வியில் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும், மக்கள் சார்ந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்துகிறது. ஒவ்வொரு இல்லத்துக்கும் திட்டங்கள் சென்றடைந்துள்ளதால் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.
தேர்தலை நடத்துவதற்குத் தான் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது; கட்சியின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சி வழக்கு தொடர்கிறது; பதிவு நீக்கத்திற்கு தடையை பெறுவோம். 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்; இப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கேட்போம்.
தவெக தலைவர் விஜய் சொல்லக்கூடிய கருத்துகள் எத்தகையவை என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. நாகப்பட்டினத்தில் ரயில்வே பணிமனை அமைக்க வேண்டும் என்கிறார்; அங்கு இயங்கிய பணிமனை ஆங்கிலேயர் ஆட்சியில் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தெரியாமல், விளையாட்டு பிள்ளையாக பேசி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில், முதலீடுகளுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஈர்த்துள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரத்தை தொழில்துறை அமைச்சர் ராஜா வெளிப்படுத்தி உள்ளார். அடிப்படை தகவல் தெரியாமல் பேசுகிறார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து சொல்லக்கூடிய கருத்தும் சிறுபிள்ளைதனமானது.
விஜய் வருகை திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் பிரிப்பார். அதிமுக-பாஜக கூட்டணிக்குதான் பாதிப்பு. திமுக கூட்டணியில் விரிசல் இல்லை; ஒற்றுமையாக இருக்கிறோம். திமுக கூட்டணியில் விரிசல் என பழனிசாமி கூறுவதைக் பார்க்கும்போது, விஜய் மேனியா தொற்றிக் கொண்டுள்ளார். கூடுதல் கட்சிகள் திமுக கூட்டணியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணா, எம்ஜிஆர் குறித்து நாம் தமிழர் கட்சி சீமானின் கருத்து நாகரீகமற்றது.
சீமான் பட்டம் பெற்றதற்கு காரணம், தமிழகத்தில் திராவிட கட்சிகள் உருவாக்கிய கல்வி சார்ந்த கட்டமைப்புதான். நன்றி மறந்து சீமான் பேசுகிறார் என்று அவர் கூறினார்.