விஜய் பேசியபோது ‛பவர்கட்’.. கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது? சம்பவ இடத்தில் இருந்த பெண் கூறிய தகவல்
“விஜய் பேசும்போது எல்லோரும் தூரமாக நின்றார்கள். பவர் கட் ஆனது. விஜய் பேசுவது கேட்கவில்லை. இதனால் கொஞ்சம் முன்னோக்கி செல்வோம் என்று நகர்ந்தனர். ஆர்வமாக முன்னோக்கி சென்றதால் நெரிசல் ஏற்பட்டது” என்று, மயங்கிய பெண்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸில் இருந்த ஒரு பெண் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் 31 பேர் பலியாகினர்.
6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 31 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள், காயமடைந்தோரின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் சிந்தி கதறி வருகின்றனர். மேலும் உயிரிழப்புகளுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்து வருகிறது.
இந்த நிலையில், புதிய தலைமுறை சேனலுக்கு பெண் ஒருவர் பேட்டியளித்தார். அவர் கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு மயங்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸில் பயணித்தார். மருத்துவமனையில் கூட்ட நெரிசல் குறித்து கேள்வி கேட்டபோது, அவர் கூறியது:
“விஜய் பேசுவதை சாதாரணமாக நின்று பார்த்தாலே தெரியும். ஆனால் அடிக்கடி வண்டி வந்ததால் பலர் தள்ளத் தொடங்கினர். ஆண்கள், பெண்கள் அனைவரும் தள்ள ஆரம்பித்தனர். செருப்புகள் எல்லாம் போய்விட்டது. நாங்கள் வந்த ஆம்புலன்ஸில் மொத்தம் 4 பேர் இருந்தோம். அதில் 3 பேர் இறந்துவிட்டனர். நிறைய பேர் மயங்கினர். நாங்கள் பிரசார கூட்டத்துக்குள் செல்லவில்லை. உள்ளே போனால் சிக்கிப் கொள்வோம் என்று வெளியே வந்தோம். ஓரமாக நின்றோம். எல்லாரும் நிறைய பேர் தூரமாக தான் நின்றார்கள். பவர் கட் ஆனது. இதனால் விஜய் பேசுவது கேட்கவில்லை. இதனால் கொஞ்சம் முன்னோக்கி செல்வோம் என்று நகர்ந்தனர். ஆர்வமாக முன்னோக்கி சென்றனர். அதன் பிறகு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.”
இதனால் மின்சாரம் தடைப்பட்டு விஜய் பேசுவது கேட்காமல் போனது தான் கூட்ட நெரிசலுக்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.