“அவர்கள் கூறியது 10 ஆயிரம் பேர், ஆனால் வந்தது 27 ஆயிரம்” – பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தகவல்

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அங்கு 27 ஆயிரம் பேர் வந்துள்ளதாக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“கரூரில் நடந்தது மிகுந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம். தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38. அதில் ஆண்கள் 12, பெண்கள் 16, குழந்தைகள் 10 உள்ளனர். சம்பவம் சம்பந்தமாக காவல்துறை உடனே ஆலோசனை நடத்தி, சம்பவ இடத்திற்கு 2000 போலீஸாரைக் கையளித்து அனுப்பியுள்ளனர்.

இதற்கு முன்பு திருச்சி, திருவாரூர், நாகை போன்ற இடங்களில் கூட்டங்களை கவனித்த போலீஸ் அதிகாரிகள், இந்த இடம் கேட்டதைவிட பெரியது என கருதி அனுமதி வழங்கினர். இதே இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மாநிலக் கட்சி பிரச்சாரம் நடத்தி இருந்தது. அவர்கள் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என கூறினார்கள். ஆனால் உண்மையில் வந்தோர் 27 ஆயிரத்துக்கு மேல். இதை முன்கூட்டியே கருதி 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என்று தவெக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் கூட்டம் காலை 11 மணிக்கு சேரத் தொடங்கியது. இதில் காத்திருந்த மக்களுக்கு உணவு, தண்ணீர் சரியான முறையில் வழங்கப்படவில்லை. இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது.

விஜய் வரும்போதே கூட்டம் பின்னாலிருந்து வந்திருந்ததால், ஊருக்குள் போலீஸார் மிகவும் கஷ்டப்பட்டு கூட்டத்தை அழைத்து வந்தனர். இதற்காக விஜய் போலீஸாருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” – என பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தெரிவித்தார்.

Facebook Comments Box