பொன் மாணிக்கவேல் மீது பதிவான வழக்கு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பணியாற்றிக் கொண்டிருந்த போது, டிஎஸ்பி காதர் பாட்ஷா மற்றும் பிறர் சிலை கடத்தலுக்கு உடன்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டது. சிபிஐ வழக்குப் பதிவு செய்து, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதற்கிடையே, பொன் மாணிக்கவேல் தன்ன்மீது பதிவான வழக்கை ரத்து செய்யவும், குற்றப்பத்திரிகையின் நகலை தனக்கு வழங்க உத்தரவிடுமாறு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு கூறியது:

  • மனுதாரருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த குற்றச்சாட்டில் போதுமான ஆதாரங்கள் இல்லை.
  • அதனால், குற்றப்பத்திரிகை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. முதல் தகவல் அறிக்கையும் தேவையற்றது.
  • சிலை திருட்டு வழக்குகளில் சிறப்புக் குழு மேற்கொள்ளும் முயற்சியை சீர்குலைக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது.
  • குற்றப்பத்திரிகை மற்றும் முதல் தகவல் அறிக்கை மனுதாரருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆதரிக்காது.

நீதி பாதுகாப்பை பாதிக்கும் விதமாக, ஆதாரமற்ற குற்றப்பத்திரிகைகளை அனுமதிப்பது தவறாகும். ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கிளம்பும் கும்பல்கள், சேகரித்த தகவல்களை அழிக்க முயற்சிக்கலாம். இது நீதியின் நலனை பாதிக்கும்.

மனுதாரர் மீது புகார் அளித்தவருக்கு எதிரான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. அதன்போது, மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் சரியானதாக இல்லை. எனவே, பொன் மாணிக்கவேல் மீது பதிவான வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகின்றது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Comments Box