தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி அளித்தாலும் கொள்கையில் மாறமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி வழங்கினாலும், எங்கள் கொள்கையை மாற்றமாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்த “வெற்றிப் பள்ளிகள்” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, நடப்பாண்டில் 236 வட்டாரங்களில் 369 பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கான தொடக்க விழா நேற்று நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் 43 லட்சம் மாணவர்கள், 32 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ரூ.2,152 கோடி நிதி மத்திய அரசு வழங்கவில்லை. இதற்குப் பதிலாக, சில கொள்கைகளை (மும்மொழி கொள்கை) ஏற்குமாறு வற்புறுத்துகிறார்கள். அதை ஏற்க எங்களுக்கு அவசியம் இல்லை. ரூ.2 ஆயிரம் கோடி அல்ல, ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் எங்கள் கொள்கை மாறாது.

எங்கள் பிள்ளைகளின் கல்விக்கு தடையாக இருக்க வேண்டாம். தயவு செய்து ஒதுங்கி இருங்கள். எங்கள் மாணவர்கள் எல்லாம் மேலே வந்துவிட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நாகை எம்.பி. செல்வராஜ், எம்எல்ஏ நாகை மாலி மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box