“பாதுகாப்பு சரியாக இருந்தால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும்” – கரூரில் எடப்பாடி பழனிசாமி

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“பொதுக்கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் உருவானதாகவும் ஊடகங்கள் மூலம் தகவல் கிடைத்தது.

இத்தகைய பெரிய கூட்டம் நடக்கும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதே கட்சி ஏற்கெனவே 4 கூட்டங்களை நடத்தியிருக்கிறது. அதை ஆய்வு செய்து முழுமையான பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகள் தெளிவாகவே தெரிய வந்தன. இது ஒரே கட்சி பிரச்சினை அல்ல. அதிமுக சார்பில் நான் நடத்தும் பயணங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு குறைவாகவே இருக்கிறது.

அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக நடந்து வருகிறது. ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி எனப் பாராமல், சமநிலையோடு செயல்பட வேண்டும். எங்கள் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கும் கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம். ஆனால் இப்போது திமுக ஆட்சி வந்த பிறகு கூட்டம் நடத்துவதற்கே நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது. அதேசமயம், அரசியல் கட்சி தலைவரும் அவர் செல்லும் இடங்களில் ஏற்படும் குறைபாடுகளை முன்கூட்டியே ஆராய்ந்து, முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படும் போது, பொதுமக்கள் அரசியல் கட்சியையும், அரசையும், காவல்துறையையும் நம்பித்தான் வருகிறார்கள். ஒரு நேரம் அறிவித்துவிட்டு, பல மணி நேரம் தாமதமாக வரும்போது பிரச்சினைகள் தவிர்க்க முடியாது.

இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆனால் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவிலேயே இதுபோல ஒரு பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதே இல்லை. இது மிகுந்த துயரத்தை தருகிறது.

முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்றது குறித்து — எந்த அரசும் இருந்தாலும் இத்தகைய சூழலில் அதே செயலையே மேற்கொண்டிருக்கும். அது ஒரு அரசின் கடமை. அதைத்தான் இப்போது அரசு செய்துள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Facebook Comments Box