கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தது மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருக்க வேண்டும். துயரச் சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.”

ஜி.கே.வாசன் கூறியதாவது:

“இச்சம்பவத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு தீர்வு காண வேண்டும். இது அரசயில் செய்ய வேண்டிய நேரம் அல்ல. துயரமான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில் நிரந்தர பாதிப்பு இல்லாமல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.”

மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

“விபத்து தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை தாமதமில்லாமல் 2 வாரத்தில் முடித்து உரிய நீதி வழங்க வேண்டும்.”

Facebook Comments Box