‘கரூரில் திட்டமிட்ட சதி போல…’ – நீதிமன்றத்தில் தவெக மனு

உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் முறையிட்ட தவெக தரப்பு, “கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்து போலத் தோன்றவில்லை; அது திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது” என்று கூறியுள்ளது.

கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம், பெருந்துயரத்தை ஏற்படுத்தியதோடு, அரசியல் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

இந்த பின்னணியில், உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதி தண்டபாணியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக வழக்கறிஞர்கள் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில், “கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தாகத் தெரியவில்லை. பிரச்சாரம் நடக்கும் நேரத்தில் எங்கிருந்தோ கற்கள் வீசப்பட்டன, போலீஸார் தடியடி நடவடிக்கை எடுத்தனர். இதற்காக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து முறையான விசாரணை நடத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டனர்.

நீதிபதி தண்டபாணி, “இதற்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். அதன்படி, தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், “நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் விரிவாக விவாதிக்க முடியாது. விசாரணைக்குப் பிறகு கருத்துகளை தெரிவிப்போம்” என்றார்.

இந்த சந்திப்பின் போது, தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் வருவாரா என்றும், ஏன் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் கேள்விகள் எழுந்தன. இதற்கு விஜய் பதில் அளிக்காமல் சென்றார்.

Facebook Comments Box