கரூர் சம்பவம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்கு
கரூர் சம்பவத்தை மையமாக கொண்டு சமூக வலைதளங்களில் பொது அமைதியை பாதிக்கும் வகையில் வதந்திகளைப் பரப்பிய 25 பதிவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,
“கரூர் அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து யாரும் வதந்தி பரப்பக்கூடாது. விசாரணை முடிவின் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கப் போகிறது. சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதியை பாதிக்கும் வகையில் இருக்கிறது.
இதனால், 25 சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பிய நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையெனில் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் அல்லது பொது அமைதியை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் எந்தவித பதிவும் செய்யக்கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என சென்னை பெருநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளது.