கரூர் நெரிசல் விபத்து: தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி. மதியழகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, கரூர் நகர போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி. மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய மூவர்மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த பிரிவுகள்:
- பிரிவு 105 (கொலைக்கு ஒப்பானது அல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை)
- பிரிவு 110 (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி)
- பிரிவு 125 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலட்சியச் செயல்கள்)
- பிரிவு 223 (பொது அதிகாரி உத்தரவினை மீறுதல்)
- பொதுச் சொத்து சேதம் விளைவித்தல்.
இது தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தலைமறைவாக இருந்த மதியழகன் இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முதல் தகவல் அறிக்கையில் (FIR) முதல் குற்றவாளியாக மதியழகனின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. மேலும், புஸ்ஸி ஆனந்தை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.