சென்னை மண்டலத்தில் இந்த ஆண்டிற்குள் 50 கோயில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டலத்தைச் சேர்ந்த இணை ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு இதுவரை ரூ.1,187.83 கோடியை முதல்வர் ஸ்டாலின் அரசு நிதியாக வழங்கியுள்ளார். துறை தொடங்கப்பட்ட நாளில் முதல் எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத வகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,707 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சென்னை மண்டலங்களில் மட்டும், ஓட்டேரி செல்லப்பிள்ளையார் கோயில், வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில், கொடுங்கையூர் பவானியம்மன் கோயில், கொண்டிதோப்பு காசி விஸ்வநாதர் கோயில், கொளத்தூர் சோமநாதசுவாமி கோயில், பெசண்ட்நகர் மகாலட்சுமி கோயில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், போரூர் ராமநாதீஸ்வரர் கோயில் ஆகிய 8 கோயில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்.
மேலும், இந்த ஆண்டிற்குள் சென்னை மண்டலங்களில் 50 கோயில்களுக்கு திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளதாக பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோயிலில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரர் ர. ரதிவர்ஷினிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை அமைச்சர் வழங்கினார்.