சேலையூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற 15 ஆண்டுகளாக போராடும் கவுன்சிலர்!
தாம்பரம் மாநகராட்சி சேலையூர் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கடந்த 15 ஆண்டுகளாக திமுக கவுன்சிலர் தாமோதரன் கோரிக்கை மனுக்கள் அளித்து வருகிறார். ஆனால் மாநகராட்சி நிர்வாகம், அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெதுவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சேலையூர் 45-வது வார்டின் ஏழுமலை தெரு – பள்ளிக்கூடத் தெருவை இணைக்கும் சாலையில், சிலர் சட்டவிரோதமாக வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.
இந்தச் சாலையில் அங்கன்வாடி மற்றும் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மொத்தம் 22 அடி அகலமுள்ள சாலை, ஆக்கிரமிப்பால் 3 அடியாக குறுகிவிட்டது. குழந்தைகளை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், செல்லப்பிராணிகள் மற்றும் மாடுகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொதுமக்கள் ஆகியோருக்கு இது பெரும் இடையூறாக உள்ளது.
வரைபடத்தின்படி, அந்த இடம் சாலையாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கு சாலை அமைத்துத் தரவும், தாமோதரன் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் முதல்வர், எம்எல்ஏ, எம்.பி., அமைச்சர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் என பல்வேறு தரப்பினருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்களுடன் அருகிலுள்ள பகுதிகளிலும் வாழும் மக்கள் பயன்பெறுவர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரே பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அகற்ற முடியவில்லை என்றால், ஆக்கிரமிப்பாளர்களின் அரசியல் செல்வாக்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
எனவே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கி, பொதுப் பயன்பாட்டுக்கான சாலையை மீண்டும் அமைத்து மக்களுக்கு திறந்து விட வேண்டும் என்று பல தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
கவுன்சிலர் தாமோதரன் கூறுகையில்:
“சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் அளித்து வருகிறேன். ஆனால் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அகற்றும் நடவடிக்கையில் அரசியல் அழுத்தம் காரணமாக அதிகாரிகள் நிறுத்தி விடுகின்றனர். எனவே, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலையை ஆக்கிரமித்தவர்களை உடனடியாக அகற்றி, மீண்டும் ஆக்கிரமிக்க முடியாத வகையில் சாலை அமைக்க வேண்டும்,” என்றார்.
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்:
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிறிய சாலைகள் முதல் பெரிய சாலைகள் வரை வியாபாரிகளும், பொதுமக்களும் தங்கள் விருப்பப்படி சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த வேண்டிய நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், ஆக்கிரமிப்பு பிரச்சினைகளை புறக்கணித்து, புதிய குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.