எண்ணூர் விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

எண்ணூரில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் நடந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

“எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும், மின்வாரியத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணனையும் உடனடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் உடல்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளேன்,” என தெரிவித்துள்ளார்.

விபத்து விபரம்:

திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் அமைக்கப்படும் 2×660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பணிகளில் 3,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தற்போது சுமார் 70% வேலைகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலை மின் நிலையத்தின் முகப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, திடீரென இரும்பு கம்பிகள் கொண்ட அமைப்பு சரிந்து விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Facebook Comments Box