கரூர் நெரிசல் முதல் 10 ரூபாய் விவகாரம் வரை: செந்தில் பாலாஜியின் விளக்கம்
கரூரில் விஜய் 19 நிமிடம் இருந்தபோது, 10 நிமிடம் பேசியதாலேயே பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது என்று முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார். மேலும், “ரூ.10” குறித்த குற்றச்சாட்டு பற்றியும் அவர் விளக்கமளித்தார்.
கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி,
“செப்.27 கரூரில் நடந்த சம்பவம் மிகுந்த துயரம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறேன். சம்பவத்துக்குப் பிறகு உடனே வந்து ஆறுதல் கூறிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
என் வாழ்வில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது இல்லை. 29 வருடங்கள் மக்களுடன் பொதுவாழ்வில் இருக்கிறேன். இந்த துயர சம்பவம் இனி எங்கும் நிகழக்கூடாது.
110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் பெரும்பாலோர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். இது அரசியலாக பார்க்க வேண்டிய விஷயம் அல்ல. உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நான் அந்த குடும்பங்களோடு நேரடியாக தொடர்பில் உள்ளேன்.
விஜயின் கூட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சரியானதல்ல. 7 ஆயிரம் பேர் கொள்ளளவு உள்ள இடத்தில் 25 ஆயிரம் பேர் வந்துள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. மாலை 4 மணிக்கு சுமார் 5 ஆயிரம் பேர் இருந்தனர். அவர் நேரத்துக்கு வந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.
மேலும், கூட்டத்தில் செருப்பு வீச்சு, ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது எல்லாம் நேரலையில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இருந்தும், தவறுக்கு பொறுப்பு ஏற்காமல் பழி சுமத்தப்படுவது சரியல்ல. கூட்டம் கட்டுக்கடங்கியதாக இல்லை; கட்டுப்பாடற்றதாக இருந்தது. கட்சி தொண்டர்கள் ஒழுங்குபடுத்தவில்லை. அரசாங்கம் தன் கடமைகளைச் செய்த நிலையில், கட்சிதான் தவறு செய்துள்ளது.
‘ரூ.10 விவகாரம்’ குறித்தும் அவர் கூறியதாவது:
2016–21 அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக 7,540 வழக்குகள், அதற்கு மேலாக வசூலித்ததாக 8,666 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் ரூ.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2021க்குப் பிறகு 18,253 வழக்குகள், அதில் ரூ.10-க்கு மேல் வசூலித்ததாக 2,356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.8.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அது அரசுக்கு சென்றிருந்தால், அதற்கு முன்பு பழனிசாமி அரசுக்கு போயிருக்கிறது. எனவே, “ரூ.10 பழனிசாமிதான்” என அவர் ஒப்புக்கொள்ள வேண்டும்.
சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு கூறுபவர்கள், ஆதாரங்களுடன் விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கலாம். அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டுகளை வீசுவது தவறு.
19 நிமிடத்தில் 10 நிமிடம் பேசி பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. தவறுக்கு பொறுப்பு ஏற்காமல் பிறர்மீது சுமத்தப்படுவது தப்பானது” என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
பேட்டியின் போது எல்இடி திரையில் கூட்டக் காட்சிகள், செருப்பு வீச்சு, ஜெனரேட்டர் அணைப்பு, காவல்துறைக்கு விஜய் நன்றி சொன்னது, அவரது தரப்பில் தண்ணீர் பாட்டில் வீசிய காட்சிகள் ஆகியவையும் காண்பிக்கப்பட்டன.