ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி மனு: அக்.3-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை
கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் போலீஸார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதே வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தனித்தனியாக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் எதிர்பாராதது; மிகுந்த துரதிருஷ்டவசமானது. அனுமதி கோரும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிகமானோர் கூடினர். பெண்கள், குழந்தைகள் பொதுக்கூட்டத்துக்கு வரக்கூடாது என எங்கள் தலைவர் வலியுறுத்தியிருந்தார். இருந்தபோதும் போலீஸார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை.
கூட்டத்தில் கட்டுக்கடங்காத திரள் கூடியது. அதற்காக போதுமான போலீஸார் நிறுத்தப்படவில்லை. செப்.25-ம் தேதி வரை எங்களிடம் எவ்வித எச்சரிக்கையும் போலீஸார் வழங்கவில்லை. கூட்டத்தின் போது சில சமூக விரோதிகள் நுழைந்து விஜய் மீது காலணியை வீசியனர். பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அனுமதித்தனர். முன்கூட்டியே திட்டமிட்டு வந்த குண்டர்கள் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாக்கினர். போலீஸாரும் தடியடி நடத்தினர்; மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இவை அனைத்துமே துயரச் சம்பவத்திற்கு காரணம்.
எங்களை அரசியல் காரணங்களுக்காகவே இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர். எனவே முன்ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.”
இந்த மனுக்கள் வரும் அக்டோபர் 3-ம் தேதி தசரா விடுமுறைக்கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.