குறைவான கூலி, கடுமையான வேலை: புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான கொடுமைக்கு தீர்வு கோரும் சிபிஎம்
எண்ணூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த கூலி, கடுமையான வேலை முறையில் புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வயலூர் ஊராட்சியில் எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து, 9 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கட்சியின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 X 660 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படுகின்றது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு கட்டுமானப் பணிகளை முடிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ஆனால் கட்டுமான பணிகளில் தொடர்ச்சியான விபத்துகள் நடைபெறுவதும், புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மீஞ்சூர் பகுதியில் இது இரண்டாவது விபத்தாகும்; இதற்கு முன் ஒருவரும் உயிரிழந்தார். 150 அடி உயரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பணியாற்றியதால் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது: நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின்சார வாரியம் மற்றும் ஒப்பந்தம் பெற்ற பெல் நிறுவனம் இணைந்து பின்பற்ற வேண்டும். அதை செய்யாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறைந்த கூலி, கடுமையான வேலை முறையில் புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு, வேலை நேரம், கூலி வழங்கப்பட வேண்டும்; புலம்பெயர் தொழிலாளர் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மனித உழைப்பையும், உயிரையும் மதிக்காத நிறுவனங்களுக்கான ஒப்பந்த உரிமைகளை ரத்து செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம், மத்திய அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. உயிரிழந்தவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதால், ஒப்பந்தம் பெற்ற பெல் நிறுவனத்திடமிருந்து குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு, படுகாயமுற்ற தொழிலாளர்களுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று பெ.சண்முகம் தெரிவித்தார்.