கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை மனு நிராகரிப்பு – தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டங்களுக்கு தடை

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மற்றும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. அதோடு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டங்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில், 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அரசியல் கூட்டங்களை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், தவெக அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என 7 பேர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர்மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்கள் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் விசாரிக்கப்பட்டன. இறுதியாக, சிபிஐ விசாரணை மற்றும் கூடுதல் இழப்பீடு கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேசமயம், நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவும் நீதிமன்றம் வழங்கியது.

Facebook Comments Box