தவெக நாமக்கல் மாவட்ட செயலருக்கு முன்ஜாமீன் மறுப்பு – “கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா?” என ஐகோர்ட் கேள்வி
தமிழக வெற்றிக்கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் பங்கேற்றபோது, நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடந்ததாக சதீஷ்குமாருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். கைது அச்சத்தில் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
தன்னை குற்றத்தில் தொடர்பில்லாமல் அரசியல் காரணத்துக்காக மட்டுமே வழக்கில் சேர்த்துள்ளதாகவும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் சதீஷ்குமார் மனுவில் குறிப்பிட்டார்.
ஆனால், காவல்துறை தரப்பில், சதீஷ்குமாரின் கட்சியினரின் செயலால் ரூ.5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்மீது பொது சொத்துகள் சேதப்படுத்தியதாக மேலும் 8 வழக்குகள் இருப்பதாகவும் வாதிடப்பட்டது.
புகைப்பட ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி என்.செந்தில்குமார், “கட்சியினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்; இதைத் தெரியாது என்று மனுதாரர் கூறுவது எப்படி? கட்சியினரை கட்டுப்படுத்தத் தெரியாதா? பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பி, முன்ஜாமீன் மனுவை நிராகரித்தார்.