ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை – காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதளத்தில் புரட்சி குறித்து பதிவிட்ட தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் “இலங்கை, நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்” என கருத்து வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது.

தேச பாதுகாப்பையும், நல்லிணக்கத்தையும் பாதிக்கக் கூடியதாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் இருந்த அந்த பதிவுக்கெதிராக, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ். எம். கதிரவன், “ஆதவ் அர்ஜுனா மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், “ஆதவ் அர்ஜுனா மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனு பொருந்தாது” என்று வாதிடப்பட்டது. மேலும், அவரது எக்ஸ் தள பதிவுகளும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.

விசாரணைக்கு பின் நீதிபதி உத்தரவிட்டதாவது:

“ஒரு சிறிய வார்த்தையே பெரிய பிரச்சினையை உருவாக்கக்கூடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவை மட்டும் காத்திருக்கிறதா காவல்துறை? புரட்சி ஏற்படும் வகையில் பதிவிட்டுள்ளதால், அதன் பின்னணி முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொறுப்பற்ற சமூக வலைதள பதிவுகளுக்கு காவல்துறை தீவிர கவனம் செலுத்தி, தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறி, நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

Facebook Comments Box