“கரூரில் சம்பவத்திற்கு விஜய் பொது மன்னிப்பு கோர வேண்டும்” – வேல்முருகன் விமர்சனம்

“கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமான தவெக தலைவர் விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். இதுவரை காவல் துறை அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியதை நியாயமானது. மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தலையிடுகிறார்கள் என்பதற்காக யாரையும் தப்பிக்க விடக் கூடாது. தவறுகள் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.

சம்பவம் நடக்கும்போதே, அங்கிருந்து விஜய் வெளியே சென்றார். பின்னர் பொது செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் அங்கிருந்து விலகினர். உங்கள் விஜய் உங்களை பார்க்க வருவதாக கூறி, மக்கள் அங்கே வந்தனர். அவர்கள் அங்கு உயிரிழந்த போது, அவர்களின் கவலையை பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எப்படி வீடு திரும்பினீர்கள்?

இந்த சம்பவத்திற்கு விஜய் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ‘தனக்கு சம்பந்தமில்லை’ எனக் கூறி வீடியோ வெளியிடுவது ஏற்கப்படமாட்டாது. விஜய்யின் வீடியோ பதிவு வில்லனிடம் நியாயம் பேசுவதுபோல் உள்ளது; இது தமிழக மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள எங்கள் கட்சிக்கு கூட ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், விஜய் கூட்டத்திற்காக கேட்ட இடத்தை ஐபிஎஸ் அதிகாரிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். இதற்கும் முதல்வர் அவசியமாக கவனம் செலுத்த வேண்டும்” என்று வேல்முருகன் தெரிவித்தார்.

Facebook Comments Box