“அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்” – அப்பாவு விமர்சனம்

“அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு, விஜய் தனது கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டிகளை தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள செயற்கை மைதானத்தை புதுப்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார்.

தமிழக முதல்வர் எந்த ஒரு காரியத்தையும் கவிழ்த்தோ அல்லது தவறாகச் செய்ய மாட்டார். கரூர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே, அவர் நள்ளிரவில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் மற்றும் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால், விஜய் சதி செய்து காலதாமதம் செய்து கரூருக்கு வந்ததாலேயே பெரும் விபத்து ஏற்பட்டது.

19 அடி அகலம் கொண்ட சாலையில் 12 அடி அகலம் கொண்ட பேருந்தில் விஜய் வந்ததால் தள்ளுமுள்ளு உருவாகி, நெருக்கடி ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். விஜய் வரும்போது 10 ஆயிரம் பேர் உடன் அழைத்து வந்ததால், உள்ளூர் மக்கள் அவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பிரச்சாரப் பகுதிக்கு காலதாமதமாக வந்த விஜய், 7 நிமிடம் ஷூட்டிங் செய்து 41 பேர் உயிரிழந்த பிறகு தனி விமானத்தில் பனையூரில் பதுங்கினார்.

கூட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கட்சியின் தலைவர் நேரடியாக சென்று மக்களை சந்தித்திருக்க வேண்டும். கட்சி கூட்டத்தில் நிகழ்ந்ததை கவனித்து, கட்சிக் கொடியை குறைந்தபட்சம் அரைக் கம்பத்தில் பறக்கவைத்திருக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்ததும், அவர்களுக்கு நன்றி தெரிவித்து மக்களுக்கு ஆறுதல் கூறியதாக காணொளி ஒன்று வெளிவந்தது.

50 வயதில் விஜய் தான் அங்கிள், ஆனால் எல்லாரையும் அங்கிள் என அழைக்கிறார். சினிமாவில் ஒப்பந்தம் போட்டு நடித்த விஜய், அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம் செய்து தனது கட்சியை இயக்கி வருகிறார். திமுகவுக்கும் எந்தக் கட்சிக்கும் ரகசிய தொடர்பு இல்லை.

நடிகர் விஜய்யை நான் விரும்புகிறேன். அவரது காமெடிகளை ரசித்து பார்ப்பேன். அதேபோல், தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுகவுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. கரூர் சம்பவத்தில் யாரால் தவறு நடந்திருந்தாலும், அந்த நபரை வழிநடத்தியவரை இந்த அரசு கடுமையாக செயல்படச் செய்யும்” என்று அப்பாவு தெரிவித்தார்.

Facebook Comments Box