3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவரா? – மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்காமல், 3 மணி நேரத்துக்கு பிறகு ட்வீட் செய்யும் ஒருவர், 3 நாட்கள் கழித்து வீடியோ வெளியிடும் ஒருவர் எப்படி தலைவராக இருக்க முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கேள்வி எழுப்பினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறியும், காயமடைந்தவர்களைச் சந்தித்தும் எம்.ஏ. பேபி, எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன், சச்சிதானந்தம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி, எம்எல்ஏ நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஏ. பேபி, “இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. முதல்வர் அரசியல் பார்வை இன்றி, உடனடியாக வந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, காயமடைந்தவர்களை ஆறுதல் கூறியுள்ளார். இவ்வாறான விபத்துகள் இனி எங்கும் நடக்கக் கூடாது. தற்போது 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் கட்சியினர் தவறிவிட்டனர். 7 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் மூத்தவர்கள், பெண்கள், குழந்தைகள் தண்ணீர், உணவு இன்றி சோர்வடைந்தனர். இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை. கூட்டம் அதிகமானால் அதை கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட கட்சித் தலைவரின் கடமை.
ஒரு துயரச் சம்பவம் நடந்தபோது, உடனே சென்று உதவி செய்ய வேண்டும். ஆனால் 3 மணி நேரம் கழித்து ட்வீட் செய்து, 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவராக இருக்க முடியாது. குற்றம் சுமத்துவதோ, தண்டனை கோருவதோ எங்கள் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” என்றார்.