முதல்வர் கரூருக்குச் சென்றது தேர்தல் லாபத்திற்காக: பழனிசாமி குற்றச்சாட்டு

“விஷச் சாராயத்தில் பலர் உயிரிழந்தபோது கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆறுதல் கூறாத முதல்வர் ஸ்டாலின், தற்போது தேர்தல் பலனுக்காகவே கரூருக்குச் சென்றுள்ளார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பாலக்கோட்டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விமர்சித்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி பகுதிகளில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:

“கச்சத்தீவு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச தகுதியற்றவர். மத்தியிலும் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆட்சியிலிருந்த காலத்தில்தான் கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அதிமுக, அதை மீட்க உச்சநீதிமன்றம் வரை சென்றது.

அதிமுக எப்போதும் மக்களின் நலனுக்காக போராடும் கட்சி. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்ததும் முதல்வர் உடனடியாக சென்று ஆறுதல் கூறியது தவறில்லை. ஆனால், கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களில் அவர் ஏன் செல்லவில்லை? இப்போது அவர் சென்றிருப்பது வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டுதான்.

ஸ்டாலின், பழனிசாமிக்கு கொள்கை இல்லை என்று சொல்வது பொருந்தாது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் முரண்பட்ட கொள்கைகளுடன் சேர்ந்துள்ளன. அவர்களின் ஒரே நோக்கம் அதிகாரம் பிடிப்பதே. திமுக கூட்டணி சேர்ந்தபோது பாஜக நல்ல கட்சியாக இருந்தது; அதிமுக கூட்டணி சேர்ந்ததும் மதவாதக் கட்சியாகிவிடுகிறதா? தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் பாஜக கூட்டணியின் நோக்கம்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கிய தருமபுரி மாவட்ட நீர்ப்பாசனத் திட்டங்களை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. ஒரு திட்டத்தை நிறைவேற்ற 53 மாதங்கள் போதவில்லையா? மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்” என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ, நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் பழனிசாமி பதிவிட்டிருப்பதாவது:

“எங்கள் கூட்டணியின் கொள்கை — ஆட்சியில் திறமையற்ற, நிதி நிர்வாகத்தில் தோல்வியடைந்த, சட்ட ஒழுங்கு பாதுகாப்பில் சீர்குலைந்த, பெண்கள் பாதுகாப்பு உறுதியளிக்கத் தவறிய, போதைப்பொருள் பரவல் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத திமுக ஆட்சியை விரட்டியே ஆக வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box