கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளதாக தற்பொழுது தெரியவந்துள்ளது.
இந்த குழுவில் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றும் மற்றொரு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் சேர்ந்துள்ளனர். அவர்களுடன் 3 ஏடிஎஸ்பிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இந்த விசாரணைக் குழுவில் இணைந்துள்ளனர்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதன் பின்னர், அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும் என கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச். தினேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி என். செந்தில்குமார் முன்பு வழக்கை விசாரித்து, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக கரூர் போலீஸார் அந்த குழுவிற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
அஸ்ரா கார்க் யார்?
அஸ்ரா கார்க் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2004-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு ஆன இவர், தமிழக பிரிவில் பணியமர்த்தப்பட்டவர். முதலில் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றார். 2008-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஆனார். கந்துவட்டிக் கொடுமை தொடர்பான நடவடிக்கைகள் மூலம் அவர் பெயர் பெற்றார்.
2010-ல் மதுரை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றார். கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு வழக்குகளை கையாள்வதில் அவர் கவனம் ஈர்த்தார். 2016-ம் ஆண்டு மத்திய பணிக்கு செல்லும் போது, 2018-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் பதவி உயர்வுடன் பணியமர்த்தப்பட்டார். 2022-ம் ஆண்டு வடக்கு மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு, தற்போது அதே பதவியில் இருக்கிறார். நேர்மை, துணிச்சலுக்கு பெயர்பெற்ற அஸ்ரா கார்க் பல உயரிய காவல் விருதுகளையும் பெற்றவர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு ஏற்பாடு செய்துள்ளது.