திருப்பூர் குமரனையும் சுப்பிரமணிய சிவாவையும் நினைவுகூருவோம்: பிரதமர் மோடி
பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவாவை நினைவுகூர்ந்து வணங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள். இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைப்பதிவில், “இன்று நாம் பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவாவை நினைவுகூர்ந்து வணங்குவோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்களும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்றுச் சிந்தனை விதைப்பதற்காகவும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
திருப்பூர் குமரன், தனது இறுதி மூச்சுவரை தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார். இதன் மூலம் அவர் அசாத்திய துணிச்சலும், தன்னலமற்ற தியாகத்தையும் வெளிப்படுத்தினார். சுப்பிரமணிய சிவா தனது தைரியமான எழுத்து மற்றும் உரை மூலம் எண்ணற்ற இளைஞர்களுக்கு கலாச்சார பெருமிதம் மற்றும் தேசப்பற்று உணர்வை ஊட்டினார்.
இவ்விரு மாமனிதர்களின் செயல்கள் நம் நினைவில் என்றும் நீடித்து, காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைக்காக போராடிய பல மக்களின் பெரும் முயற்சிகளை நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் நோக்கி நாம் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்கு தொடர்ந்து ஊக்கமாக அமையட்டும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் குமரன்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4ம் தேதி பிறந்த திருப்பூர் குமரன், 1932 சட்ட மறுப்பு இயக்கத்தின் போது தமிழகம் முழுவதும் நடைபெற்ற அறப்போராட்டத்தில் பங்கேற்றார். 1932 ஜனவரி 10ம் தேதி தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமை ஏற்றி சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு, 11ம் தேதி உயிரிழந்தார். இதனால் அவர் “கொடிகாத்த குமரன்” என்று அழைக்கப்படுகிறார்.
சுப்பிரமணிய சிவா
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884 அக்டோபர் 4ம் தேதி பிறந்த சுப்பிரமணிய சிவா, அரசியல் மற்றும் ஆன்மிகத்தை இணைத்து விடுதலைக்காகப் போராடினார். சிறந்த மேடை பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆன இவர், வ.உ. சிதம்பரம் மற்றும் சுப்ரமணிய பாரதி போன்றோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பலமுறை கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் அனுபவித்தவர். தொழுநோய் காரணமாக 1925 ஜூலை 23ம் தேதி 40 வயதில் உயிரிழந்தார்.