மேட்டூர் அருகே பாலமலை வனப்பகுதியில் வழி தவறிய 36 பக்தர்கள் மீட்பு

மேட்டூர் அருகே பாலமலை வனப்பகுதியில் வழி தவறி சிக்கிய 36 பக்தர்களை வனத்துறையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பாக மீட்டனர்.

மேட்டூர் அருகே உள்ள சித்தேஸ்வரன் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனப்பாதையை கடந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த பாதை குறுகலாகவும், அடர்ந்த வனப்பகுதியாகவும் உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், குருவரெட்டியூர் வனப்பாதை வழியாக சித்தேஸ்வரன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை, இறங்கும்போது ஈரோடு மாவட்டத்திலிருந்து 35 பேர், நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஒருவர் என மொத்தம் 36 பேர் வழி தவறி அடர்ந்த வனப்பகுதியில் சிக்கினர்.

அனைவரது செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் செல்போனில் மட்டும் சிக்னல் இருந்தது. அந்த நபர் உடனடியாக காவல் உதவி மைய எண் 100-க்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, காவல் கட்டுப்பாட்டு மையம் கொளத்தூர் மற்றும் அம்மாப்பேட்டை காவல் நிலையங்களுக்கு தகவல் வழங்கியது.

மேட்டூர் வனத்துறையினர் மற்றும் போலீஸார் பாலமலை வனப்பகுதியில் நீண்ட நேரம் தேடி, 36 பக்தர்களையும் பாதுகாப்பாக மீட்டனர். மீட்புக்குப் பிறகு, அவர்கள் குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டு, வனப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Facebook Comments Box