சென்னை வண்ணாரப்பேட்டை ரயில்வே குடியிருப்பில் வசிப்போரை அப்புறப்படுத்தும் முடிவுக்கு எஸ்ஆர்எம்யு கண்டனம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே குடியிருப்புகளில் வசிப்போருக்கு மாற்று வசதி வழங்காமல் அவர்களை அப்புறப்படுத்தும் ரயில்வே நிர்வாகத்தின் முடிவுக்கு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (SRMU) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை ரயில்வே காலனியில் மொத்தம் 64 குடியிருப்புகள் உள்ளன. பாதுகாப்பு காரணங்களை மேற்கோளாகக் காட்டி, எந்தவித முன் அறிவிப்புமின்றி, குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறு சென்னை ரயில்வே கோட்டம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எஸ்ஆர்எம்யு சார்பில் இன்று (அக். 4) கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் என். கண்ணையா அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை கோட்டச் செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பால் மேக்ஸ்வெல் ஜான்சன் கூறியதாவது:

“வண்ணாரப்பேட்டை ரயில்வே காலனியில் உள்ள 64 குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டுள்ள ரயில்வே நிர்வாகத்தை எங்கள் சங்கம் கண்டிக்கிறது. கட்டி முடித்து சில ஆண்டுகளே ஆன நிலையில் பாதுகாப்பற்றதாகக் கூறுவது பொருந்தாது. இதற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இங்குள்ள ரயில்வே ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மாற்று குடியிருப்பு வசதி செய்யாமல், அவசரமாக வீட்டை காலி செய்ய சொல்லுவது மனிதாபிமானமற்றது. எனவே, இதே பகுதியில் மாற்று குடியிருப்புகளை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எஸ்ஆர்எம்யு சார்பில் போராட்டம் நடத்துவோம்,” என்று அவர் எச்சரித்தார்.

Facebook Comments Box