உயிரிழந்த நிர்வாகிக்கு பதவி – ஈரோடு மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி!
உயிரிழந்த நிர்வாகி ஒருவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஈரோடு மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கடந்த மாதம் 5-ம் தேதி, அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும், இல்லையெனில் தாமே ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வோம் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அதிமுகவில் செங்கோட்டையன் வகித்த அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகள் மட்டுமின்றி, அவரின் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளும் நீக்கப்பட்டன.
அவருக்கு பதிலாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் 35-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நம்பியூர் வடக்கு ஒன்றிய பொருளாளராக கடத்தூர் ஆ.செங்காளிபாளையத்தைச் சேர்ந்த எஸ்.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் கடந்த மே 12-ம் தேதி உயிரிழந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நியமனம் குறித்து அதிமுகவினர் பலரும் “கட்சியில் யார் உயிருடன் இருக்கிறார்கள், யார் இல்லை என்பதற்கே தெரியவில்லை” என அதிர்ச்சி மற்றும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே. செல்வராஜ் கேட்டபோது, “பார்க்கலாம்” என சுருக்கமான பதிலை அளித்துள்ளார்.