கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானமாக செயல்படுகிறார்: டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
“கரூர் சம்பவத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகவும் பொறுப்புடன், அமைதியாக கையாளுகிறார். யாரையும் கைது செய்யவேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை என தெரிகிறது. அந்நிகழ்வில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்; இது மிகுந்த துயரமானது. இதுகுறித்து அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருந்தாலும், விஜய் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நான் அரசின் சார்பில் பேசவில்லை; ஆனால், நடுநிலையாகப் பார்க்கும்போது அரசு அனைத்தையும் நிதானமாகச் செய்கிறது. தவெகா இந்தச் சம்பவத்தை திட்டமிட்டு செய்தது அல்ல. நிர்வாக அனுபவம் குறைவால் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது.
விஜய் தனது தார்மீகப் பொறுப்பை ஏற்றிருந்தால் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்காது. அவருக்கு ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர்கள் அல்லது நெருங்கியவர்கள் ‘பழி உங்கள்மேல் வரும்’ என கூறியதால் விஜய் அமைதியாக இருக்கிறார் என நான் கருதுகிறேன்.
இந்த விவகாரத்தில் பலரும் நிதானமாக கருத்து தெரிவித்தனர். ஆனால் எம்.பி.க்கள் குழு அமைத்து பழனிசாமி போன்று பாஜக பாணியில் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தின் போது இதுபோன்ற குழு ஒன்று உருவாகவில்லை.
இது வருங்காலத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். விஜய் அரசியலில் புதிதாக வந்தவர்; அவரைச் சூழ்ந்திருப்பவர்களுக்கும் அரசியல் அனுபவம் குறைவு என்பதால் இப்படிப்பட்ட தவறு நிகழ்ந்துள்ளது,” என தினகரன் தெரிவித்தார்.