கரூர் விவகாரம் குறித்து விசாரணை அறிக்கை வந்தபின் பதிலளிப்பேன் – செந்தில் பாலாஜி

கரூர் விவகாரம் தொடர்பாக தற்போது எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை; விசாரணை அறிக்கை வெளியாகிய பின்னரே அதுகுறித்து பேசுவேன் என்று திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக புதிய பொறுப்பாளராக துரை. செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டதை ஒட்டி, காந்திபுரத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நேற்று (அக். 5) நடைபெற்றது. இந்நிகழ்வில் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செந்தமிழ்செல்வன் தற்போது கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்கிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வது நமது முக்கிய இலக்கு. அதற்கான தயாரிப்புகள் தொடர் வேகத்தில் நடைபெற்று வருகின்றன,” என்றார்.

அதன்பின் கரூர் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த விவகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பேசியுள்ளேன். இனி விசாரணை ஆணையம் தனது பணியை முடித்த பின், அறிக்கை வெளியாகிய பிறகே அதுகுறித்து பேசுவது சரியானது. எனவே இப்போது அதற்கான கேள்விகளை தவிர்க்கலாம்,” என்று கூறினார்.

மேலும் அவர், “அந்த வழக்கில் புதிய வீடியோக்கள் மற்றும் ஆதாரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும். தமிழக அரசு இதனை அரசியல் நோக்கில் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அதற்கான முழுமையான விளக்கம் அரசின் சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் அரசு மீது கேள்வி எழுப்பும் முன், ஏன் தவெக தலைவர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தார், ஏன் 500 மீட்டர் முன்பே வாகனத்துக்குள் சென்றார் என்பதையும் கேட்க வேண்டும். மதியம் 12 மணிக்கு திட்டமிடப்பட்ட கூட்டம் ஏன் இரவு 7 மணிக்கு நடைபெற்றது? டிசம்பரில் நடத்த திட்டமிட்டிருந்த பிரச்சாரம் ஏன் திடீரென முன்கூட்டியே நடத்தப்பட்டது என்பதையும் கேள்வி கேட்க வேண்டும்,” என்றார்.

அவர் மேலும், “நான் இப்போது கரூர் விவகாரம் குறித்து பேசப் போவதில்லை. விசாரணை முடிந்து அறிக்கை வெளிவந்த பிறகு அதுகுறித்து விரிவாக பதிலளிப்பேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box