ஸ்பெயின் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
ஸ்பெயினில் நடைபெற்ற ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடத்தை பிடித்து சிறப்பான சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றிக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 3-வது இடம் பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியின் மூலம் உலக அரங்கில் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமையடையச் செய்த அஜித்குமாருக்கும், அவரது குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
மேலும்,
“இந்த சர்வதேசப் போட்டியின்போது கார், பந்தய உபகரணங்கள், ஜெர்சிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை பயன்படுத்தியதற்காக தமிழக அரசின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அஜித்குமாரின் அணி இன்னும் பல வெற்றிகளை குவிக்கட்டும்,”
என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.