“ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” — தவெகை குறித்துப் பிரேமலதா கடும் விமர்சனம்
ஒரு கட்சியாக இருக்க வேண்டுமெனில் தைரியமும், வீரமும் அவசியம். ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு முதலில் முன்னிலையில் நிற்க வேண்டும். ஆனால் விஜய், அவ்வப்போது தேவையான நேரத்தில் அங்கு வரவில்லை. இதுவே அவர் செய்த முதல் தவறு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்தார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
“தவெக நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர் என்று சொல்கிறார்கள். என்ன, தலைக்கு கத்தியா வரப்போகிறது? தூக்கிலா போடப்போகிறார்கள்? ஒரு கட்சி என்றால் தைரியம் வேண்டும், வீரம் வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், முதல் ஆளாக நின்று காப்பாற்ற வேண்டும். ஆனால் விஜய், குறித்த நேரத்தில் அங்கு வரவில்லை. இதுவே அவர் செய்த முதல் தவறு.
உங்களைப் பார்க்கவே தாய்மார்கள் குழந்தைகளுடன் காலை முதலே சாலையில் நிற்கிறார்கள். அந்தப் பொறுப்பு வேண்டாமா? 7 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சி என்றால், அதே நேரத்தில் அங்கு இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் வீட்டிலிருந்தே தனி விமானத்தில் வருகிறீர்கள். விஜயகாந்த் 150 படங்களில் நடித்தவர்; படப்பிடிப்புக்காக அவர் மேக்கப் உடன் முதலாவதாகவே சென்று நிற்பார். அந்தக் கடமை உணர்வை விஜய் இழந்துவிட்டார்.
விஜயகாந்த் படப்பிடிப்புக்கு நேர்மையாகச் செல்வார்; ஆனால் அரசியலில் விஜய் இன்னும் புதியவர். அரசாங்கத்தையும் காவல்துறையையும் நம்பி ஏன் நடக்கிறீர்கள்? உங்களை நம்பி வரும் மக்களுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு கொடுக்கிறீர்கள்? உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கு தண்ணீரும் உணவும் கொடுக்க வேண்டாமா? இதுவே அவர் செய்த அடுத்த தவறு.
ஏதோ கூண்டுக்குள் ஒளிந்துகொள்வது போல பேருந்துக்குள் இருந்தார். உங்கள் அண்ணன் விஜயகாந்த் செய்ததைப் போல நீங்கள் கற்றுக்கொண்டு நடக்க வேண்டும், விஜய்,” எனப் பிரேமலதா தெரிவித்தார்.