“விஜய்யுடன் கூட்டணி பாவமல்ல, சாபம்” — திருநாவுக்கரசருக்கு காசிமுத்துமாணிக்கம் கண்டனம்

“விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பாவமல்ல, சாபம்” என திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட பேரதிர்ச்சியான 41 உயிரிழப்புகள் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் விஜய்யை தொடர்புகொண்டு பேசினார். இதனால், காங்கிரஸ்–தவெக கூட்டணி சாத்தியமா என்ற பேச்சு எழுந்தது. இதுகுறித்து திருநாவுக்கரசர், “விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் அது ஒன்றும் பாவம் இல்லையே?” என கூறியிருந்தார்.

அதற்கு பதிலாக காசிமுத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“விஜய்யை பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக பார்க்கும் நிலையில், அவரிடம் ராகுல் பேசியதை தவறாக எடுக்கவில்லை. ஆனால், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பாவமல்ல என்று திருநாவுக்கரசர் கூறுவது எதிர்கால நம்பிக்கைக்கு ஏற்றதல்ல.

திமுகவினருக்கும் கர்நாடகத்தில் ஆட்சியில் பங்கு பெற ஆசை உண்டு; புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் ஆர்வமும் உண்டு. அதைப் பற்றி பேசுவது தவறில்லை என்று திருநாவுக்கரசர் சொல்வாரா?

ஒரு கூட்டத்தை ஊர் ஊராக இழுத்துச் சென்று, ஒரே இடத்தில் நின்று கலாட்டா செய்யும் விஜய்யின் செயல்களை ஏன் கண்டிக்கவில்லை?

உயிரிழந்தவர்கள் கரூரில் மட்டும் அல்ல; தருமபுரி, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், நெல்லை என பல மாவட்டங்களில் இருந்தனர். அதை கண்டிக்காதது ஏன்?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்காக ‘அப்போலோவில் மருத்துவ உதவி வழங்குகிறேன்’ என ஒரு அறிக்கைக்கூட விடாத விஜய்யை முதலில் கண்டியுங்கள்,” என அவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கை தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிரமான விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

Facebook Comments Box