அண்ணாமலையார் கோயிலில் புதிய கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்தவிதமான புதிய கட்டிடங்களும் நிரந்தரமாக கட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் எஸ். சவுந்தர்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக, கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல் வெளியாகியதையடுத்து, இதை எதிர்த்து ஆலய வழிபாடாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர். ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், கோயிலுக்குள் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத் தடை உத்தரவையும் வழங்கி, விசாரணையை அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் இருவரும் நேற்று நேரடியாக திருவண்ணாமலை சென்றனர். அங்கு அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பகுதி, அம்மனி அம்மன் கோபுரம் அருகே நடைபெறும் கட்டுமானப் பணிகள், மற்றும் கோயில் வளாகத்திலுள்ள விருந்தினர் இல்லங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது, கோசாலை பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை கண்டு நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர்.
அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது:
“கோயில் வளாகத்துக்குள் நிரந்தர கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது.
காத்திருப்பு அறையை மட்டும் போதிய காற்றோட்டத்துடன், மேல் பகுதியில் சீட் அமைத்து, குடிநீர் வசதி சேர்த்து ஏற்படுத்துங்கள்.
பெரிய கட்டிடங்கள் தேவையில்லை.
கோயில் வளாகத்துக்குள் கழிப்பறைகள் கட்டக் கூடாது.
கோயில் சுவர் எக்காரணத்தாலும் சேதப்படுத்தப்படக் கூடாது.
இத்தகைய பெருமைமிக்க கோயில்களை இன்றைய அரசாங்கம் மீண்டும் கட்ட இயலுமா?” என கடுமையாக வினவினர்.
மேலும், பிரசாதக் கடை கட்டும் திட்டத்தையும் நீதிபதிகள் பரிசீலித்து,
“கோயிலுக்குள் எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது”
என்று தெளிவாக உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கா. தர்ப்பகராஜ், மாவட்ட நீதிபதி மதுசூதனன், எஸ்.பி. எம். சுதாகர், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.