ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ்-ஐ முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்த அவரது மகன் மற்றும் பாமக தலைவரும் அன்புமணி ராமதாஸ் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளன. பயப்பட வேண்டிய எந்த பிரச்சினையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது ICU-வில் 6 மணி நேரம் இருக்கிறார், அதன்பின் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார்.”

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்:

“பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு கண்காணித்து வருகிறார். பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு நாளில் அவர் வீட்டுக்குச் செல்லுவர்.”

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் மருத்துவமனை சென்று ராமதாஸை சந்தித்து அவரது நலனைக் கேட்டறிந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:

“தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்புக்குரிய ராமதாஸை சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்வார் என நம்புகிறேன்.”

அதே நேரத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையையும் முதல்வர் விசாரித்தார். சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டதாவது:

“வைகோ உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இன்று மருத்துவமனையில் அவரது குடும்பத்தாரிடமும், மருத்துவரிடமும் அவரது சிகிச்சை குறித்து கேட்டறிந்தேன்.”

இந்த சந்திப்பில் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் எ.வ.வேலு உடன் இருந்தனர்.

Facebook Comments Box