தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

  • பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, தொழிற் கல்வி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களை முந்தைய அரசுகள் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளன. அதே வகையில் தற்போதைய பகுதிநேர ஆசிரியர்களையும் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • அரசின் பல்வேறு துறைகளிலும் பகுதி நேர தற்காலிக பணியாளர்கள் (துப்புரவு பணியாளர்கள், மணியகாரர், தலையாரி, எழுத்தர், நூலகர்) பின்னர் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட வரலாறு உள்ளது. இதுபோன்ற முன் உதாரணங்களை கொண்டு, பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரமாக மாற்ற அரசாணை மேற்கொள்ள வேண்டும்.
  • சம வேலை, சம ஊதியம் விதிப்படி ஒரே கல்வித் தகுதி உடைய ஒரே பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை ஒரே மாதிரியான சம்பளத்தில் பணியமர்த்த வேண்டும். தற்போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாய் தொகுப்பூதியம் மற்றும் 2,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது; இது சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் காலமுறை சம்பளத்துடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.
  • 2012 முதல் 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம், போனஸ், பண்டிகை கடன், நிவாரணம், மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பலன்கள் வழங்கப்படவில்லை. இதனால் கல்வி பணியில் ஈடுபட்ட 12,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
  • ஏழாவது ஊதியக் குழு பகுதிநேர ஆசிரியர்களுக்கும் 30% சம்பள உயர்வு உண்டு என குறிப்பிட்டிருந்தும், தற்போது அது வழங்கப்படவில்லை. எட்டாவது ஊதியக் குழு அமுல் செய்யும் நிலையில் அரசால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  • ஆகவே, தொகுப்பூதிய முறையை கைவிட்டு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கே வழங்கப்படும் காலமுறை சம்பளத்தையே பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஓய்வூதியம் மற்றும் அனைத்து அரசு சலுகைகள் உடனடியாக கிடைக்கும்.
  • Pay Band Level 10 அடிப்படையில் ரூ. 20,600 சம்பளம் வழங்கப்படுவதைப் போல, பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.
  • பணி நிரந்தரம் செய்வது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் பெருமை; அதற்காக வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்ட அரசாணை வெளியிட வேண்டும். 53 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்களுக்குப் பின், இன்னும் ஏழு மாதங்கள் அரசு காலம் உள்ளது; ஆகவே, அக்டோபர் முதல் பிப்ரவரி வரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:

“இந்த ஐந்து மாதங்களுக்குள் போர்க்கால அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.”

Facebook Comments Box